சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ’நீயே ஒளி’ இசைக் கச்சேரி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் வரகிற சனிக்கிழமை (பிப்.10) நடைபெற உள்ளது. இந்த நிலையில், இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “இது என்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பு. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி எனக்கானது கிடையாது. இது பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பான இசை நிகழ்ச்சியாக இருக்கும்.
நானும் ஒரு விளையாட்டு வீரர்தான். இந்த இடத்தின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சாலிகிராமத்தில் சுற்றிக் கொண்டு இருந்தவன் நான். சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைகளுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டைக் காட்டினால் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் என்னுடைய பாடல்கள் மட்டுமின்றி யுவன், ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையில் நான் பாடிய பாடல்களையும் பாட உள்ளேன்.
தொடக்கம் முதல் இறுதி வரை நான்-ஸ்டாப் ஆக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.போதைப் பழக்கத்தை விட இது போன்ற இசை நிகழ்ச்சிகள் இளைஞர்களுக்கு வேறு விதமாக இருக்கும். சினிமாவில் கூட்டணி என்பது முடிந்துவிட்டது. இப்போது இல்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாடகர் அறிவு இசைக் கச்சேரிக்கு அழைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இசைக்கச்சேரி குறித்து பாடகர் அறிவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன். ஆனால் அவர் என்னை பிளாக் செய்திருப்பதால், மெசேஜை அவர் பார்த்திருக்க மாட்டார்” என தெரிவித்தார். மேலும் ’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடலில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு இப்படி ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
பின்னர், விஜய் அரசியல் வருகை குறித்துப் பேசுகையில், விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் இந்தியாவில் மொபைல் புரட்சி ஏற்பட்டது. இதுபோல ஒரு புரட்சியாளர் வந்ததால் தொலைத்தொடர்பு உலகமே மாறியது. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் நேர்மை அரசியலிலும் இருந்தால், அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "நான் தான் ஹீரோ என்றதும், ஹீரோயின்கள் வேண்டாம் என்றனர்" - புகழ்