சென்னை: ரேஷன் கடைகளில் பணிபுரியக்கூடிய பணியாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக பி.டி சார் திரைப்படத்தில் வந்த காட்சிகளை நீக்குமாறும் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப் பதியுமாறும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்துக் காவல் தலைமை இயக்குநருக்கு, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பா.தினேஷ் குமார் அளித்துள்ள புகாரில், “தமிழக முழுவதும் ரேஷன் கடையில் பணிபுரியக்கூடிய பணியாளர்களை மிகவும் மன உளைச்சல் படுத்தும் விதமாகவும் கொச்சையாகப் பிரதிபலிக்கும் வகையில் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்து கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பிடி சார் திரைப்படத்தில் வசனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படக் காட்சியில் ரேஷன் கடைக்குப்போகும்போது ஒவ்வொரு முறை பணம் வாங்கும் போது, அவன் என் கையை தொட்டுத் தொட்டு வாங்குகிறான். இதெல்லாம் சகிச்சுக்கிட்டு குடும்பத்தைக் காப்பாற்றுவதாக நடிகை தேவதர்ஷினி மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த காட்சிகள் அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடையிலே பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினர்கள் இந்த கண்ணியமற்ற காட்சியானது மிகவும் புண்படுத்தச் செய்துள்ளது சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய படக்குழு, சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ளாமல் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய ஒரு துறையினரையே கொச்சைப்படுத்தி மிகவும் இழிவான, மலிவான சொற்களைப் பயன்படுத்தி காட்சிகளை அமைத்துள்ளது.
இந்த காட்சியானது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. படத்தில் இருந்து காட்சிகளை நீக்கவும், படத்தில் நடித்துள்ள நடிகர் ஹிப்ஹாப் ஆதி, நடிகை தேவதர்ஷினி மற்றும் படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி எங்களது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாஸான லுக்கில் சூர்யா 44 படப்பிடிப்பு தொடங்கியது! - Suriya 44 Shooting