சென்னை: அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ரணம் அறம் தவறேல்'. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகை தான்யா ஹோப், "நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகை சரஸ் மேனன் பேசுகையில், "பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரணம் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். ஒரு ப்ராஜெக்ட்டில் நாம் இணைவதற்கு முன்னர், அப்படத்திற்கான நடிகர் நடிகைகளுக்கான ஆடிஷன் நடக்கும். எனக்கும் சில ப்ராஜெக்ட்கள் காலதாமதமாகி இருக்கிறது. அப்போது நான் ஒரு வெஃப் சீரிஸில் கிரியேட்டிவ் வொர்க் மற்றும் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த ஸ்பாட்டில் என்னோடு ஒளிப்பதிவாளர் செல்வா மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் உதய் போன்றோர் பணியாற்றி வந்தனர்.
அப்போதே எனக்குத் தெரியாமல் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. எனவே இதன் மூலம் இப்படத்தில் நடிக்க ஆடிஷன் இல்லாமலே வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் நான்கு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருப்பதால், எனக்கு இக்கதாபாத்திரம் செய்வது எளிதாக இருந்தது. ஷெரிஃப் மற்றும் மது சார் இருவருக்கும் என் நன்றிகள். என்னுடன் நடித்த தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். வைபவ் சாரின் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். அவரின் 25வது படத்தில் நடித்திருப்பது பெருமை.
இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கும், சக்திவேலன் சாருக்கும் என்னுடைய நன்றிகள். சக்திவேலன் சாரின் படங்கள் என்றால் நல்ல படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும். இப்போது சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் (LUCKY CHAMP). இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்துப் பாருங்கள் குறிப்பாகப் பெண்கள் அனைவரும் இப்படத்தைப் பார்த்துவிட்டு ஆற்றலைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்" என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியாக படக்கதாநாயகன் வைபவ் படம் குறித்து மனம் திறந்தார். அப்போது அவர் பேசியதாவது, "சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி அவரை சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. படத்தில் சிறப்பாக நடித்திருக்கின்ற தான்யா ஹோப்புக்கு நன்றி. ஷெரிஃப் பற்றி இப்போது தான் தெரியும். நான் அவரிடம் பேசும்போது, யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தைச் சிறப்பாக எடுத்திருக்கிறார்.
குறும்படம் எடுத்து இப்போது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன். உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி. அவரின் பெயரைத் திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
மேலும், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாஸ் ரவிக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள். தளபதி 68 படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்குக் கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.. நடிகர் கார்த்திக் ரசிகர்கள் எதிர்ப்பு..!