சென்னை: ’வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குநர் டி.ஜே.ஞானவேல் வேட்டையன் திரைப்படம் முழுவதும் கதை சார்ந்து இருக்கும் எனவும், ரஜினியின் கமர்ஷியல் காட்சிகள் குறைவாக தான் இருக்கும் என ப்ரோமோஷன்களில் தெரிவித்தார். அதே நேரத்தில் படத்தில் ரஜினி அளவிற்கு உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் எனவும் கூறினார்.
இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்கள் பெறுகிறது. முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளதாகவும், இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாக நகர்வதாகவும் கருத்து தெரிவித்தனர். முன்பு டிரெய்லர் வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்டையன் வெளியான போது ஓப்பனிங் குறைவாக இருந்தது.
அதே நேரத்தில் படத்தில் ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங் ஆகியோரது நடிப்பு பாராட்டை பெற்று வருகிறது. மேலும் அனிருத்தின் பின்னணி இசை ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு ஏற்றார் போல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழ் மொழியில் 26.15 கோடியும், தெலுங்கில் 3.2 கோடியும், ஹிந்தியின் 60 லட்சமும் வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரசிகராக 'வேட்டையன்' படம் பார்த்த தளபதி விஜய்!
முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெயிலர் முதல் நாளில் இந்தியா முழுவதும் 48 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 23.4 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் வசூல் வரும் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்