சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் 'கூலி'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதன் டைட்டில் டீசர் முன்னதாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இளையராஜாவின் இசையில் வெளியான 'டிஸ்கோ டிஸ்கோ' என்ற பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த டீசர் மற்றும் இசை வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இளையராஜா 'கூலி' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதில், “கூலி பட டீசரில் இளையராஜாவின் தங்கமகன் படத்தில் இடம்பெறும் 'வா வா பக்கம் வா' என்ற பாடலில் இடம்பெறும் குறிப்பிட்ட வரிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜாவிடம் முறையாக அனுமதி பெறவில்லை. இளையராஜாவின் அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் அவரே. ஆனால், அவரின் உரிமையைப் பெறாமல் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, 'கூலி' படத்தின் டீசரில் இடம் பெறும் இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்தப் பகுதியை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “கூலி படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து இளையராஜா தொடர்ந்துள்ள பதிப்புரிமை (copy rights) வழக்கு குறித்து கேள்விக்கு, “அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்னை” எனக் கூறினார். மேலும், வேட்டையன் படம் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: உத்தம வில்லனாக மாறும் லிங்குசாமி - கமல்ஹாசன் விவகாரம்.. என்னதான் நடந்தது? முழு விவரம்! - Kamalhaasan Vs Lingusamy