சென்னை: இந்திய திரையுலகில் சமீபகாலமாக மலையாள சினிமா பேசு பொருளாகி உள்ளது எனச் சொன்னால் மிகையாகாது. மலையாள சினிமாவின் கதைகள் கேரளா தாண்டியும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் என மலையாள சினிமா வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனம் பெற்று வருவதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான ரொமான்டிக் காமெடி படமான 'பிரேமலு' பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இயக்குநர் கிரீஷ் ஏ.டி "தண்ணீர் மாத்தன் தினங்கள்" மற்றும் "சூப்பர் சரண்யா" போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி உள்ளது.
இப்படத்தில் நஸ்லென் கே.கபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு திரைப்படம் தற்போது சினிமா ஆர்வலர்களிடையே பேசுபொருளாக உள்ளது. நஸ்லென் கபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.
மலையாள திரையுலகை கடந்து தமிழிலும் இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் மலையாள படங்களான மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் இங்கு சக்கை போடு போட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, நடிகர் பிரித்விராஜ் நடித்து வெளியாகியுள்ள மலையாள படமான ஆடு ஜீவிதம் இணைந்துள்ளது.
அழகான காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள பிரேமலு இளைஞர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இப்படம் கடந்த மாதம் 29ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இன்னும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 12ம் தேதி ஹாட்ஸ்டார் (premalu in hotstar) ஓடிடி தளத்தில் பிரேமலு ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியிலும் இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.