சென்னை: தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மும்மரமாக நடித்து வருகிறார். முதன்முறையாகப் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ஜவான் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ஆயிரத்து 140 கோடி வசூலாகி சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பைக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், டெஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில், மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா. வாடகைத் தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். குழந்தைகளுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்ட நயன்தாரா, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, அடிக்கடி தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், இன்று (பிப்.14) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் அவரது வலைத்தளப் பக்கத்தில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், “காதலில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். எனது தங்கத்துடன் 10 ஆண்டுகள். எனது உயிராகவும், உலகமாகவும் இருந்தவள் நீ, தற்போது உயிர் உலகம் நாமாக மாறியிருக்கிறோம். நாம் கடந்து வந்த பல தருணங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். பல தருணங்களுடன் நீண்ட தூரம் வந்திருப்பது என்னுடைய பாக்கியம். உன்னை நேசிக்கிறேன் உயிரே” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியலில் விஜய்க்கு பெரும் ஆதரவு.. உதயநிதிதான் மிகச்சிறந்த நபர் - நடிகர் சதீஷ் பேச்சு