டெல்லி: திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில், 1954ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் அடிப்படையிலான திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா பெருந்தொற்று காரணமாக, 2021ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கு தகுதியான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி, கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவுற்றன.
இதனிடையே, தேசிய திரைப்பட விருது பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் போன்றவற்றை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. நீரஜா சேகர் தலைமையிலான குழு பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்தது. இந்த குழுவின் பரிந்துரையின்படி, 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன் படி 1984 ஆம் ஆண்டு முதல், ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக படத்திற்கான வழங்கப்பட்டு வந்த ‘இந்திரா காந்தி விருது’, ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான 3 இலட்சம் பரிசுத்தொகை, படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இயக்குநருக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
1965 ஆம் ஆண்டு முதல், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்காக வழங்கப்பட்டு வந்த ‘நர்கிஸ் தத் விருது’, ‘தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகிய இருவருக்கும் 2 லட்சம் ரூபாய் பணமும், பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருது பெறுபவர்களுக்கு, இதுவரை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சிறந்த அறிமுகப் படம், சிறந்த படம், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் திரைப்படத்திற்காக வழங்கப்படும் ‘ஸ்வர்ன் கமல்’ விருதிற்கான பரிசுத்தொலை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, சிறந்த ஏ.வி.ஜி.சி (AVGC - Animation, Visuval, Effects, Gaming, Comics) என்ற பிரிவில் கீழ் வழங்கப்பட உள்ளன. சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, இசை உள்ளிட்ட பிற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரஜத் கமல் விருதிற்கான பரிசுத்தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி!