சென்னை: சிதம்பரம் இயக்கத்தில் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் உள்ள மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகைக்குள் சிக்கிட, அந்த நண்பனைக் காப்பாற்றப் போராடும் நண்பர்களின் உண்மைக் கதைதான் இப்படம்.
இப்படம் வெளியாகி உலகளவில் மொத்தமாக 90 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாளப் படமாக இருந்தாலும் குணா படம் தொடர்பான கனெக்சனால் தமிழகத்தில் சக்கை போடு போட்டு வருகிறது இப்படம். மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தில் தமிழ் வசனங்கள் எழுதியதோடு, சிறு வேடத்திலும் நடித்துள்ள எழுத்தாளர் கிளைட்டன் சின்னப்பா நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தொலைப்பேசி வாயிலாகச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “எனது சொந்த ஊர் மதுரை. இயக்குநர் ஆபாவாணன் உடன் பணியாற்றி உள்ளேன். இருபதுக்கும் மேற்பட்ட சின்னத்திரை சீரியல்களை தயாரித்துள்ளேன்.
சதுரங்க வேட்டை ராமச்சந்திரன் எனது நண்பர். அவர் மூலம் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் ஆடிஷனுக்காக ராமச்சந்திரனை வண்டியில் சென்று இறக்கி விடச் சென்ற போது, நானும் வருகிறேன் என்று கூறி, நானும் ஆடிஷனில் கலந்து கொண்டேன். தமிழிலும் வசனங்கள் வருவதால் அந்த வசனங்களை எழுதும் வாய்ப்பை எனக்கு வாங்கி தாருங்கள் என்றேன். அவரும் சரி என்றார்.
அதே போல் 15 நாட்கள் கழித்து கேரளாவிலிருந்து எனக்குக் கால் வந்தது. தமிழ் வசனங்கள் நீங்கள் எழுதித் தாருங்கள் என்று. முழு ஸ்கிரிப்ட் எனக்குக் கொடுத்து விட்டனர். அதன் பிறகு நான் தமிழில் வசனங்கள் எழுதிக் கொடுத்தேன்” என்கிறார். படத்தின் வெற்றி முன்பே உங்களுக்குத் தெரிந்ததா என்ற நமது செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஒரு படம் மக்களைச் சென்றடையுமா என்பதை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது.
ஒரு குழுவாகச் சேர்ந்து எந்த ஈகோவும் இல்லாமல் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படி ஒரு குழுவை முதல் முறையாகப் பார்க்கிறேன். எல்லோரும் நண்பர்கள். எல்லோரும் சூட்டிங் வந்துவிட்டு ஊரைச் சுற்றி பார்த்துவிட்டுப் போவார்கள். நீங்கள் ஊரைச் சுற்றி பார்த்துவிட்டு சூட்டிங் எடுத்துவிட்டு போறீங்க என்று நான் கிண்டலாகச் சொல்வேன். அத்தனை ஜாலியாகவும், கடினமாகவும் உழைத்தார்கள். படப்பிடிப்பின் போது அதிகமான குளிர், மழை என்று இருந்தது.
எப்போது மழை வரும் என்று தெரியாது. அப்படியிருந்தும் சளைக்காமல் வேலை செய்தார்கள். கதையை விட இந்தக் குழுவின் கடின உழைப்புக்காக படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தோம்” என்றார். இந்த படத்தில் தமிழ் மக்களை மரியாதையுடன் காட்டியுள்ளனர். பிற மலையாளப் படங்களில் தமிழ் மக்களை அவமானப்படுத்துவது போன்ற செயல்கள் இப்படத்தில் இல்லை. இப்படத்திலும் கூட டாஸ்மாக் கடையில் தமிழர்களை அடிக்கும் காட்சி இருக்கிறது.
ஆனால் அதற்கு முந்தைய, பிந்தைய காட்சிகளை எடிட் செய்து விட்டனர். இயக்குநர் சிதம்பரத்திடம் எனக்குப் பிடித்த விஷயம் என்றால் கருத்தியல் ரீதியாகத் தமிழ், மலையாளம் தொடர்பைப் பேசுவது தான். நிறையக் காட்சிகள் படத்தில் வரவில்லை. கேமரா முன் நடிப்பது சற்று கடினம் தான். படத்தில் நடிக்கும் போது முதல் காட்சியில் சொதப்பினேன். ஆனாலும் இயக்குநர் எதுவும் சொல்லாமல் என்னை நடிக்க வைத்தார்.
தமிழ் சினிமா இயக்குநர் என்று எடுத்துக் கொண்டால் படப்பிடிப்பின் எல்லா வேலைகளும் அவர் தலையில் தான் இருக்கும். இந்தக் கதையைத் தமிழ் முன்னணி நடிகர்களிடம் எடுத்துச் சென்றால் யாரும் நடிக்க மாட்டார்கள். எந்தத் தயாரிப்பாளரும் படம் பண்ண மாட்டார். மலையாளச் சினிமா, சினிமாவாக உள்ளது. இங்குச் சினிமா வர்த்தகமாக உள்ளது. அங்குச் சிறிய படங்கள் சாத்தியம். இங்கு மிகப்பெரிய வியாபாரமாக உள்ளது.
சமீபத்திய காலங்களில் கன்னடம், மலையாளப் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. இதுவே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு அவர்களின் உழைப்பு தான் காரணம். அவர்கள் இன்னும் பயங்கரமான படங்களை எடுப்பார்கள். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாக நட்புறவுடன் வேலை செய்வார்கள். சினிமா அப்படித்தான் எடுக்க வேண்டும். படத்தில் வரும் குகை உள்ளே மட்டும் செட் போட்டோம். மற்ற எல்லாமே ரியல். படப்பிடிப்பு நடப்பது போலவே தெரியாது. ஆனால் கடினமாக உழைத்தார்கள். எனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகச் செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேய்களின் சமையலறையா கொடைக்கானல் குணா குகை? 'மஞ்சுமெல் பாய்ஸ்' கதை உண்மையா?