சென்னை: இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் மாதம் 10ஆம் தேதி 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து 'மனசிலாயோ' என்ற பாடல் நேற்று வெளியானது. மலையாளம் மற்றும் தமிழ் பாடல் வரிகளுடன் மனசிலாயோ பாடல் வெளியாகி டிரெண்ட்டிங்கில் உள்ளது.
மேலும் இப்படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி உள்ளனர். ஜாம்பவான் பாடகர்களான மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசும்ரமணியம் ஆகியோர் ரஜினியின் திரைப் படங்களில் பல மெகா ஹிட் பாடல்களை பாடியுள்ளனர். இந்நிலையில் மலேசியா வாசுதேவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2011ம்ஆண்டு காலமானார்.
ரஜினிகாந்த் - மலேசியா வாசுதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள்
திரைப்படம் பெயர் பாடல் பெயர்
- முரட்டுக் காளை 'பொதுவாக என் மனசு தங்கம்'
- தர்மயுத்தம் 'ஆகாய கங்கை'
- தர்மயுத்தம் ‘தங்க ரதத்தில் மஞ்சல் நிலவு’
- பில்லா ‘வெத்தலய போட்டேன்டி’
- போக்கிரி ராஜா ‘போக்கிரிக்கு போக்கிரி ராஜா’
- தில்லுமுல்லு 'தங்கங்களே தம்பிகளே'
- ரங்கா ‘பட்டுக்கோட்டை அம்மாளே’
- பாயும் புலி ‘ஆப்பக்கடை அன்னக்கிளி’
- பாயும் புலி ‘பொத்துகிட்டு உத்துதடி வானம்’
- மிஸ்டர் பாரத் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’
- மனிதன் ‘மனிதன் மனிதன்’
- வேலைக்காரன் ‘பெத்து எடுத்தவதான்’
- மாப்பிள்ளை 'என்னோட ராசி நல்ல ராசி'
- அருணாச்சலம் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’
இதனைத்தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மலேசியா வாசுதேவன் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு மட்டுமின்றி கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என பலரது படங்களில் மலேசியா வாசுதேவன் பாடல்கள் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா.. என்ன நடந்தது? - rashmika mandanna
கமல்ஹாசன் நடித்த 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் முதல் மரியாதை, தர்மத்தின் தலைவன், எஜமான், பில்லா, மின்சார கனவு, பத்ரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு 'வேட்டையன்' படத்தில் ஏஐ மூலம் அவரது குரல் ஒலித்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த கலைஞர்களின் குரலை மீண்டும் உருவாக்குவது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்