சென்னை: சென்னை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்துவிட்டார்.
இவரது சொத்துக்களைச் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரியும், ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படங்களை முடக்கம் செய்யக் கோரியும் சொத்தாட்சியர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, நவம்பர் 13ஆம் தேதிக்குள் (இன்று) 20 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் டெபாசிட் செய்யாமல் 'கங்குவா' படத்தை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: 'கங்குவா' திரைப்படம் ரிலீஸ்: பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்!
இந்த நிலையில், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் இந்த வழக்கு இன்று (நவ.13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், "6 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 969 ரூபாய் சொத்தாட்சியருக்கு செலுத்தப்பட்டு விட்டதால் 'கங்குவா' படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்" என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த சொத்தாட்சியர் தரப்பு வழக்கறிஞர், "100 கோடி ரூபாய் செலவில் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (நவ.14) வெளியாக உள்ளது. 20 கோடி ரூபாயை அவர்களால் செலுத்த முடியும்" என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தரப்பில், "3 கோடியே 75 லட்சம் ரூபாயை டிசம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும், ஆகவே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், டிசம்பர் 11ஆம் தேதிக்குள் 3 கோடியே 75 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும், ரூ.3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடர்பாக நாளை (நவ.14) மாலைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-11-2024/22891539_etvwc.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்