சென்னை: சமுத்திரக்கனி, யோகி பாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'அமிகோ கேரேஜ்', ஆர்.கே.சுரேஷின் 'காடுவெட்டி', தமிழில் டப்பிங் செய்யப்பட்ட மலையாள திரைப்படமான 'பிரேமலு' உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகியுள்ளன.
யாவரும் வல்லவரே: 4 வெவ்வேறு களத்தில் நடக்கும் சம்பவங்களை ஒரே இடத்தில் இணைக்கும் ஹைப்பர்லிங்ங் கதைக் களத்தைக் கொண்ட திரைப்படம் 'யாவரும் வல்லவரே'. இயக்குநர் N.A.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோருடன் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, ரித்விகா மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காடுவெட்டி: தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காடுவெட்டி'. இந்த படத்தை இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ், அண்மையில் சென்னையில் விசாரணைக்காக ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிகோ கேரேஜ்: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து, தற்போது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள படம், 'அமிகோ கேரேஜ்'. இப்படத்தில் மகேந்திரன் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பிரஷாந்த் நாகராஜன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இதில் மகேந்திரனுக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த அதிரா என்பவர் ஜோடியாக நடித்துள்ளார். இப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிப்பில் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் முரளி ஸ்ரீனிவாசன் மற்றும் என்.வி.கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நடித்துள்ள அரிசி படப்பிடிப்பு நிறைவு!