சென்னை: தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான சரவணன் அருள் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜையானது தூத்துக்குடியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் நடித்து வரும் இரண்டாவது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா ஷாம், பாயில்ராஜ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள். மேலும், பல முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்கள், வயநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளது. அதற்காக படக்குழு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி இருக்கிறார்கள்.
திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிச்சயம் வழங்கப்பட வேண்டும். கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தக்க தீர்ப்பு வழங்கும். ஒரு எதார்த்தமான நகைச்சுவையுடன் தான் ஹோட்டல் உரிமையாளர் பேசினார். அதில் சில கருத்துக்கள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவர்கள் தெரியப்படுத்தும் பொழுது தொழிலதிபர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதில் பெரிதுபடுத்துவதற்கு எதுவும் இல்லை.
இதையும் படிங்க : த.வெ.க. மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்? - TVK MAANAADU
தொழில்துறை மற்றும் சினிமா, அரசியல் மூன்றும் மிக பிடித்தமானது. மூன்றிலும் இணைந்து பயணிப்போம். மகாராஜா, டிமான்டி காலனி, கழுகு போன்ற படங்கள் கதை பொறுத்து மக்களிடம் வரவேற்கப்படுகிறது. என்னுடைய படம் ஆக்சன் திரில்லர் திரைப்படம்" என தெரிவித்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "விஜய் அரசியலை பொறுத்தவரையில், மும்முனை போட்டியில் இருக்கும். எந்த கூட்டணி சரியான கூட்டணி அமைக்கிறதோ, அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது.
ரசிகர்கள் விஜயைத் தேடி சென்று கொண்டிருந்தார்கள். இனி ரசிகர்களைத் தேடி விஜய் வருவார். நான் கட்சி தொடங்க வாய்ப்பில்லை. யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை முதல் படம் வெற்றிப் படம். இரண்டாவது படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். வெளிநாடு சென்று வெற்றிகரமாக நாடு திரும்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று கூறினார்.