சென்னை: பிஎஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகி, அனைவரது பாராட்டுகளையும் குவித்த திரைப்படம் கூழாங்கல். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, ஏராளமான விருதுகளையும் அப்படம் பெற்றது. இந்த நிலையில், தற்போது கூழாங்கல் திரைப்படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்த இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், விடுதலை படத்தை தொடர்ந்து, சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், கொட்டுக்காளி.
இதில் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கூழாங்கல் திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. வீட்டை விட்டு போன அம்மாவைத் தேடிச் செல்லும் அப்பா, மகனை பற்றிய படமாக இது எடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் குறைந்த கதாபாத்திரங்களே நடித்திருந்தாலும் அவர்களது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது எனலாம். கூழாங்கல் திரைப்படம், சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நிலையில், கூழாங்கல் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வினோத்ராஜ் தற்போது இயக்கியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில், பிப்ரவரி 16ஆம் தேதி உலகின் புகழ் பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், கொட்டுக்காளி திரைப்படம் ப்ரீமியர் ஆக திரையிடப்பட உள்ளது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் ஆக திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் கொட்டுக்காளி பெற்றுள்ளது.
சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் நடிப்பில் உருவான விடுதலை 1 மற்றும் 2 மற்றும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நோ பொலிடிக்கல் கொஸ்டின்ஸ்.. லோகேஷுடன் இணையும் ரஜினிகாந்த்.. ரஜினியின் பளீச் பதில்!