கோயம்புத்தூர்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக 'கோட்' (GOAT) படம் சர்வதேச அளவில் இன்று வெளியாகியுள்ளது. சிறப்புக் காட்சிகளுடன் பல மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருந்தனர். இப்படத்திற்கு விஜயின் முந்தைய படங்களைப் போல ஹைப் இல்லை என்ற நிலையில், அரசியல் கட்சி துவங்கிய பிறகு படம் வெளியாகியுள்ளதால் தற்போது அதிகப்படியான டிக்கெட்டுகள் ப்ரீ புக்கிங்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.
கோட் பட டிக்கெட் விற்பனையே இந்த படத்திற்கான ஹைப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜயுடன் முன்னணி கதாநாயகர்களான பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு அதிகப்படியான உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள கோட் படம் அதிகமான பொருட்செலவில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. குறிப்பாகப் படத்தின் மொத்த பட்ஜெட் விஜயின் சம்பளத்துடன் சேர்ந்து ரூ.400 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. அதில் விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோட் திரைப்படம் கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் காலை 7 மணிக்கும், மற்ற தியேட்டர்களில் காலை 9 மணிக்கும் திரையிடப்பட்டது. இதுதவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சிகள் திரையிடப்பட்டது. தற்பொது, கோவை மாவட்டத்திற்கு அருகே இருக்கும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையிலுள்ள கெளமாலையா தியேட்டரில் கோட் படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
முன்னதாக புதன்கிழமை மாலை தமிழகத்திலிருந்து சென்ற விஜய் ரசிகர்கள் ரூ.1,200 முதல் 2000 வரை ஒரு டிக்கெட்டிற்கு விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதனால் உள்ளூர் வாசிகளுக்குப் படம் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திரையரங்கத்தின் உரிமையாளரே ஒரு டிக்கெட்டின் விலையை 1,200 ரூபாய் முதல் 2,000 வரை விற்பனை செய்ததாக கேரள ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
அதுமட்டுமின்றி முதல் நாள், முதல் காட்சியிலேயே விஜய் படம் பார்க்க, தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் ஒரு டிக்கெட்டை 3,000 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், ஆகையால் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதைத் தடுக்க, கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்