சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சென்னை பிரசாத் லேபில் நடிகர் வருண், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மேடையில் பேசுகையில், "வருண் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி தான் ஆனால் அந்தச் சூழலில் இயங்குவது அவ்வளவு எளிதல்ல, டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததில் இருந்து அனைத்துக் காட்சியிலும் மிக சிறப்பாக வருண் நடித்துள்ளார்.
நானும் 10,15 படங்களில் நடித்துள்ளேன். 100 பேர் முன்னிலையில் கேமரா முன் நின்று நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆகவே, நடிகர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஜோஷ்வா ஒரு எக்ஸ்ப்ரிமென்டலான படம்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மேடையில் பேசுகையில், "பொதுவாக எந்தப் படத்தின் படப்பிடிப்பிலோ, கதையிலோ தலையிட மாட்டேன் ஒரே ஒரு முறை கதை கேட்பேன் பிடித்திருந்தால் படம் பண்ணுவேன் மற்றபடி நடுவில் எதிலும் தலையிடமாட்டேன்.
நடிகர் வருணை ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என சொன்னார்கள் அப்படி எல்லாம் கிடையாது. கடுமையாக உழைப்பைக் கொடுத்து, படத்தில் நடிக்க என்ன தகுதி வேண்டுமோ அதனைக் கற்றுக்கொண்டு தான் இந்தப் படத்தில் வருண் நடித்துள்ளார். உறவினராக இல்லாமல் ஒரு இயல்பான நடிகரைப்போலவே வருண் இருந்தார். நானும் அதில் தலையிடவில்லை.
இந்த ஆண்டு வெளியாகி ஒரு சிறிய லாபத்தைக் கொடுத்த சிங்கப்பூர் சலூனை போல இந்தப் படமும் வெற்றியடையும் எனவும் இளைஞர்களுக்கு மிகவும் இந்தப் படம் பிடிக்கும் எனவும் நம்புகிறேன். அதேபோல நடிகர் கிருஷ்ணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து நடிகர் வருண் மேடையில் பேசுகையில், என்னை நடிகனாக மெருகேற்றியதற்கு நன்றி கௌதம். பின்புலம் இருந்து வந்தாலும் நேரமும் கடின உழைப்பும் இருக்க வேண்டும். இது தான் இந்தப் படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். மாவீரன், ஜவான் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றிய யானிக் உடன் பாரிஸ் சென்று சண்டைப் பயிற்சியை மேற்கொண்டேன் அது எனக்கு மிகவும் உதவியது. இந்தப் படத்தை மக்களோடு காண ஆவலாகக் காத்திருக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டுத் தேர்தல் பிரச்சாரம்.. சரமாரியாகக் கேள்வி எழுப்பிய பெண்கள்!