சென்னை: தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் சர்தார் 2 படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட 23 சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் பின்வருமாறு;
1. படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் விபத்து, மருத்துவக் காப்பீடு உருவாக்க வேண்டும் இது தயாரிப்பாளரின் கடமையாகும்.
2. படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கு தேவையான பாதுகாப்பு, தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான உபகரணங்களும் வைத்திருக்க வேண்டும்
3. படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்யக்கூடிய ஏற்பாடுகளும், ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்
4. படப்பிடிப்பு தளத்தில் பெண் தொழிலாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் கழிவறைகள் மற்றும் உடை மாற்றி தரும் வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தி தர வேண்டும்
5. தொழில்நுட்பப் பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய லைட்மேன் ஹெல்மெட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், அதேபோல் உயரமான இடத்தில் பணியாற்றக் கூடியவர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும்
6. படப்பிடிப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ள படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும்.
ஃபெப்சி கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ”தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் தொடங்கி விடுதலை, சர்தார் 2 வரை விபத்துகள் நடந்துள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு முறை விபத்து நடைபெறும் போதும் நிர்வாகிகளை மட்டும் சந்தித்து பேசுவோம். ஆனால் இனி நாங்கள் எங்கள் உறுப்பினர்களை இழக்க தயாராக இல்லை. எனவே வரலாற்றிலே முதல்முறையாக பெப்சி 23 சங்கங்களையும் ஒன்றிணைத்து, சம்பந்தப்பட்ட 2,000 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஒன்றாக சேர்த்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி உள்ளோம்.
மேலும், விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எங்கள் உறுப்பினர்கள் கவனக்குறைவு தான். ஹீரோக்கள் திடிரென கால்ஷீட் கொடுப்பதால் 50 நாட்களில் போட வேண்டிய செட்டை 15 நாட்களில் போட சொல்கிறார்கள். தயாரிப்பாளர்களும் இதை திட்டமிட்டு செயல்படுத்துவது கிடையாது. ஹீரோ யாருக்கு தேதி கொடுக்க போகிறீர்களோ அதை முன்கூட்டியே கூறி விடுங்கள்.
மூன்று மாதத்திற்கு முன்பே கூறினால் தொழிலாளர்களுக்கு வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும். ஆகஸ்ட் 15 முதல் நாங்கள் இன்று நிறைவேற்றி உள்ள தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை பின்பற்றவில்லை என்றால் படப்பிடிப்புகள் நடைபெறாது அனைத்தும் நிறுத்தப்படும்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இன்று 32 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. ஃபெப்சி அமைப்பு அறிவிப்பு! - chennai shooting cancelled