சென்னை: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக கருதப்படும் ஷங்கர், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், ஒரு பாடல் மட்டும் மீதம் உள்ளது. மேலும், இந்தியன் 2 படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான ஃகிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு தயாராகி வருகிறது.
![பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இந்தியன் 2](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-02-2024/tn-che-04-indian2-kamal-script-7205221_27022024120101_2702f_1709015461_152.jpg)
இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள பாடல் காட்சி, சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில், இந்தியன் தாத்தாவைக் கொண்டாடும் வகையிலான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் ரண்டகா, சிவாஜி படத்தில் பல்லேலக்கா ஆகிய பாடல்களில் ஓவியங்கள் வரையப்பட்டு படமாக்கப்பட்டன. தற்போது இந்தியன் தாத்தா ஓவியங்களும் பிரமாண்ட முறையில் வரையப்பட்டு படமாக்கப்படுவது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் வரிசையில் மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பிரேமலு!