சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குத் வித் கோமாளி. இதில் மணிமேகலை தொகுப்பாளராக இருக்கிறார். மற்றொரு தொகுப்பாளராக ரக்ஷன் உள்ளார். செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக உள்ளனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை திடீரென அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " சீனியர் தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் குக் ஆக வந்து தன்னை தொல்லை செய்வதாகவும், தம்மை வேலை செய்யவிடாமல் ஒடுக்குவதாகவும் மணிமேகலை குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, பணத்தைவிட தமக்கு சுயமரியாதை முக்கியம்" எனவும் மணிமேகலை வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை அடுத்து மணிமேகலை ரசிகர்கள் மட்டும் அல்லாமல் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மணிமேகலை தனது யூடியூப் பக்கத்திலும், தனக்கு நேர்ந்த துயரங்களை அடுக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'தன்னை ஆங்கரிங் செய்யவிடாமல் சீனியர் ஆங்கர் ஒருவர் தடங்கல் செய்ததாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து அவர் எனது ஆங்கரிங் வேலையில் அதிகம் தலையிட்டு மனஅழுத்தம் தந்தார்' எனவும் பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகியுள்ளது. இவருக்கு டிவி பிரபலங்கள் சிலரும் கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.