சென்னை: இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ரசவாதி. இந்தப் படத்தை டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி - சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. ரசவாதி படத்தின் முன்னோட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ரிஷிகாந்த், நடிகைகள் ரேஷ்மா, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், "எல்லோரும் இயக்குநருக்கு நன்றி சொன்னார்கள். அதே மாதிரி தான் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இன்று வரை தாஸ் என்று தான் கூறுவார். தான்யா என் நண்பர். உங்களுடன் வேலை செய்தது ரொம்ப சந்தோசம்.
கைதி படத்திலிருந்து ரொம்ப ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். மே 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கும் ஆதரவு கொடுங்கள். நான் மகா வில்லன் இல்லை. இந்தப் படத்தில் சுஜித் நன்றாக நடித்துள்ளார். படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. தான்யா மற்றும் ரேஷ்மா இருவருடனும் இருக்கிறது. அர்ஜுன் தாஸின் ரசவாதி என்று போடுவதை நான் விரும்பவில்லை. இயக்குநர் சாந்தகுமாரின் பெயரைப் போட்டதே நல்லது தான்" என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை தான்யா ரவிச்சந்திரன், "மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கதாபாத்திரம் பெயர் சூர்யா. ரொம்ப சொல்ல முடியாது. இதுவரை பண்ண படங்களை விட இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் இன்னும் முழுமையாக படம் பார்க்கவில்லை. ஆனால், படம் நன்றாக வந்துள்ளது" என்றார்.
இதனையடுத்து பேசிய இயக்குநர் சாந்தகுமார், "ரசவாதி எனக்கு 3வது படம். ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. மௌனகுரு, மகாமுனி படங்களைத் தொடர்ந்து இது வேறு மாதிரி இருக்கும். கதை என்ன கேட்கிறதோ, அதற்கேற்ப பாடல் இருக்கும். முதல் படத்துக்காக 14 வருடமானது. இரண்டாவது படத்துக்கும் கொஞ்சம் தாமதமானது.
எல்லா சினிமாவையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அதே மாதிரி ரசவாதி படமும் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு முந்தைய படத்துக்கும், இந்தப் படத்துக்கும் சென்சாரில் எந்த பிரச்னையும் வந்ததில்லை. மௌனகுரு படத்துக்கும் டைட்டில் தேடிய போது பயன்படுத்தப்படாமல் இருந்தது" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஜி.எம் சுந்தர், "சத்யா படத்தில் நடிக்கும் போது வயது வேறு. ரசவாதி படத்தில் வயது வேறு. தமிழ் சினிமாவில் இந்த மாதிரி ஒரு அற்புதமான டைட்டில் வைத்துள்ளனர். நானும் மௌனகுரு படத்தினைப் பற்றி இயக்குநரிடம் நிறைய பேசி இருக்கிறேன்" என்றார். தொடர்ந்து பேசிய சுஜித்திடம், அரசியலில் வர வாய்ப்பு இருக்கிறதா? (உங்கள் தாத்தா இஎம்எஸ் நம்பூதிரி - பெரிய அரசியல்வாதி) என்ற கேள்விக்கு, அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. அதில் எனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இளையராஜா அப்படி கூறவில்லை..” வைரமுத்து விவகாரத்தில் சீமான் கூறியது என்ன? - SEEMAN About Ilayaraja Issue