சென்னை: தங்கலான் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி, ஜீவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “முதல் நாளில் இருந்து இப்படத்தை மீடியா சப்போர்ட் செய்வதற்கு நன்றி. விக்ரம் என்னை நம்பினார், அவருடன் வேலை பார்த்தது பெருமையாக நினைக்கிறேன். படத்தின் இறுதி வடிவம் பார்க்கும் போது அவ்வளவு உழைப்பு தெரிகிறது.
இவர்களை நடிக்க வைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மற்ற துணை நடிகர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் எதற்காக என்னை இப்படி நம்புகிறார்கள் என்று மன உளைச்சலை உண்டாக்கியது. நடிகர்கள் மட்டுமின்றி, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கடினமாக உழைத்துள்ளனர்” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தங்கலான் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசுகையில், ”ஜீவி பிரகாஷுடன் முதல்முறை பணியாற்றுவது போல் எனக்கு தெரியவில்லை. அவருடன் முன்னதாக பணியாற்றியது இல்லை, அவ்வளவு அழகாக இசை கொடுத்துள்ளார். ஜீவி நடிகராகிவிட்டார் அவரிடம் போலாமா, வேண்டாமா என தோன்றியது. இன்று மூன்று பாடல்களும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் புரமோஷன் பற்றி பா.ரஞ்சித் பேசுகையில், ”தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. ஞானவேலை இந்த படத்தில் தான் சரியாக புரிந்து கொண்டேன். படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு நடிகரின் வேலையில்லை என யோசிக்கும் போது, விக்ரம் முதல் ஆளாக புரோமோஷனில் கலந்து கொண்டார்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது படங்கள் குறித்து பேசிய பார.ரஞ்சித், “தங்கலான் படக்கதையை எழுதி முடித்த போது என்னை சரியாக புரிந்து கொள்ள முடிந்தது. இதில் என்னை கண்டுகொண்டேன் என நினைக்கிறேன். எனது மொழி சில நேரங்களில் சிக்கலானதாக இருந்துள்ளது.
தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னோடிகளாக இருந்துள்ளனர். ஏனென்றால், கமர்ஷியல் படம், கலைப் படம் என்று அவர்கள் பிரித்து பார்த்ததில்லை. முக்கியமான படமாகத்தான் பார்த்துள்ளனர். அப்படி அவர்கள் பார்த்ததால் தான் நான் இங்கு இருக்கிறேன். நான் சீரியஸான அரசியல் பேசுகிறேன் என்று ரசிகர்கள் என்னை ஓரம்கட்டியிருக்க முடியும்.
ஆனால், எதிர்மறை கருத்துகள் இருந்தாலும் எனது திரை மொழி அவர்களுக்கு பிடித்து இருந்தது. தங்கலான் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். இது பரிசோதனை முயற்சி அல்ல. இதனை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்