சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மற்றும் நடிகருமான சுந்தர் சி தனது அரண்மனை படத்தின் மூலம் ஹாரர் காமெடி வகை படத்தின் பாகங்களை எடுத்து வந்தார். மொத்தம் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இப்படத்தை Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு பேசியதாவது, அரண்மனை படத்தைத் தொடங்கும் போது இவ்வளவு பெரிய வெற்றிப் படமா அமையும், பார்ட் 4 வரைக்கும் வருமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முழு காரணம் சுந்தர் சி மட்டும் தான்.
அரண்மனை படத்தை பார்ப்பதற்கு குடும்பத்தோடு சாப்பாடுலாம் கட்டி கொண்டு வந்து பாத்தாங்க. அப்படி குடும்பத்தோடு வந்து படத்தை பார்த்தாங்க. இந்த படத்துல இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். பொதுவாக இரண்டு கதாநாயகிகள் இருந்தால் ஈகோ இருக்கும். ஆனால் தமன்னா மற்றும் ராஷி கண்ணா எங்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்காமல் நடித்து கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு முடித்துக்கொண்டார்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சுந்தர் சி, தயாரிப்பாளருக்கு நன்றி. கலகலப்பு படத்தில் வேலை பார்த்த போது என்னை அழைத்து நீங்க நடந்து வரும்போது உங்க தலைக்குப் பின்னாடி ஒரு சக்கரம் சுத்துது என வாழ்த்தினார். அவரது ஆசீர்வாதத்தால் இன்னும் திரையுலகில் என் வாழ்க்கை சக்கரம் சுத்த வேண்டும். அவர் நிறைய வாய்ப்பு தர வேண்டும். எல்லோருக்கும் என் நன்றிகள்.
நடிகை ராஷி கண்ணா பேசியதாவது, எல்லா அரண்மனை படத்தை விடவும் இந்த படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக எல்லா படத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாகப் படத்தை எடுத்துள்ளார்.
அவர் இந்த மாதிரி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். இந்தப் படத்தில் வேலை பார்த்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் அட்டகாசமாக வந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி சூப்பரான பாடல்களைத் தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும், நன்றி.
நடிகை தமன்னா பேசியதாவது, சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி உடன் என்றால் ஓகே. என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம். அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார். அவருக்கு நன்றி.
குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன், நன்றி.
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, "எல்லோருக்கும் வணக்கம். அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன். முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்குக் கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாகக் காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை.
ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப்படத்தைத் துவக்கியுள்ளேன். இப்படத்திற்கும் பின் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4ல் செய்துள்ளோம்.
நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார்? அந்த சிறு பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன்.
என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கனும், பரிதாபமும் வரனும், குழந்தைக்கு அம்மாவாக வரணும், யாரை அணுகுவது என்று நினைத்தேன். ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார்.
அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்குப் பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷி கண்ணா எனக்கு மிகவும் கம்ஃபோர்ட்டான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாகச் செய்துள்ளார்.
அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான். அதை நிறைவேற்றனும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான். ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், VTV கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள்.
மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது. ஆதரவு தாருங்கள்" என்றார்.
இதையும் படிங்க: "உலக மக்களிடம் சகோதரத்துவம் தழைத்தோங்க ஈஸ்டர் வாழ்த்துகள்"- தவெக தலைவர் விஜய் - TVK VIJAY