சென்னை: லைகா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2' ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் பா.விஜய் வரிகளில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், தம்பி ராமையா, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், பிரம்மானந்தம், மிர்ச்சி சிவா, ரோபோ ஷங்கர், இயக்குநர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், நடிகைகள் அதிதி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீதி சிங் உள்ளிட்டோரே கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அனிருத் பேசுகையில், "நான் 90ஸ் கிட் என்பதால் எனது ஃபேவரிட் இயக்குனர் சங்கர். இந்தியன் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது நான் கைகுழந்தையாக இருந்து இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால், 'இந்தியன் 2' நான் இசையமைக்கும் 33 வது திரைப்படம்.
இயக்குனர் சங்கர் சார் போல பாடல்கள் வாங்க முடியாது. ஒவ்வொரு பாடல்களுக்கும் அவ்வளவு டீடெயில்ஸ் கொடுப்பார். இரண்டு வருடம் முன்பு இதே மேடையில் 'விக்ரம்' பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அப்போது சொன்னேன். அதேபோல ஜூலை 12 இந்தியன் தாத்தா வர்றாரு; கதறவிட போறாரு" என்று அனிருத் பேசினார்.
'இந்தியன் 1' திரைப்படத்துக்கு ரகுமான் இசை அமைத்திருந்தார். தற்போது இந்தியன் 2 சினிமாவுக்கு நீங்கள் இசை அமைப்பது குறித்து என்ன நினைத்தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சிக்ஸுக்கு அப்புறம் செவன்டா... ஏ.ஆர். ரகுமானுக்கு அப்புறம் எவன்டா?" என்று பஞ்சாக பதிலளித்த அனிருத், "அவரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இசையமைப்பாளர் ஆனேன்" என பதிலளித்தார்.
"சர்வதேச அளவில் எப்போது இசை அமைப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, உலக நாயகனே இங்கே இருக்கிறார்; இதைவிட குளோபல் என்ன இருக்கு? இதுதான் குளோபல் மேடை" என்று அனிருத் பதிலளித்தார்.
1996ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேறப்பை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது. இந்தியன் கூட்டணியில் இருந்த கமல், இயக்குநர் சங்கர் மட்டுமே இரண்டாம் பாகத்தில் உள்ளனர்.
முக்கியமாக இசைப் புயல் ஏஆர் ரகுமானுக்குப் பதிலாக, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தியன் 2 ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Paaraa, Calendar Song, Neelorpam, Zagazaga, Come Back Indian, Kadharalz என ஆறு பாடல்களையும் வெரைட்டியாக கொடுத்துள்ளார் அனிருத்.
இதையும் படிங்க: கமல்ஹாசனிடம் திட்டு வாங்கிய நெல்சன், லோகேஷ்.. இந்தியன் 2 விழாவில் சுவாரஸ்ய பகிர்வு!