ஹைதராபாத்: ’புஷ்பா 2’ சிறப்பு காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடைபெற்றது. அந்த காட்சிக்கு அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து ரேவதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு அல்லு அர்ஜூன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நஷ்டஈடு வழங்கியிருந்தார்.
இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தார் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது கடந்த 11ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று (டிச.13) அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, இந்த ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த விசாரணையை அடுத்து சிக்கட்பல்லி போலீசார் சந்தியா தியேட்டர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு, ஊழியர் விகய் சந்தர் ஆகியோரை BNS 105 மற்றும் 118 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் செய்தியாளரிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தவறில்லை. எனது மனைவி புஷ்பா 2 திரைப்படம் பார்க்க விருப்பம் தெரிவித்தார். அதனால் தியேட்டருக்கு சென்றேன். மேலும் இந்த வழக்கை திரும்பப் பெற விருப்பம் தெரிவித்தார். மேலும் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது நான் போனில் செய்தியை பார்த்த பிறகு தான் தெரிந்தது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவுக்கு வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் - நீதிமன்றம் உத்தரவு! - CORONA KUMAR MOVIE ISSUE
இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை அல்லு அர்ஜூனை நீதிமன்ற காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் நாம்பள்ளி நீதிமன்றத்தில் இருந்து சான்சல் குடா சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.