ஹைதராபாத்: ’புஷ்பா 2’ திரைப்பட சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நிவாரணம் அளிப்பதாக அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர். அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருது வென்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார். இதனைத்தொடர்ந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இதனை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
அப்போது அந்த சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார். அப்போது கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், ரேவதி உயிரிழந்துவிட்டதாகவும், சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, அவர்கள் குடும்பத்தாருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அல்லு அர்ஜூன் வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார். அந்த வீடியோவில், “புஷ்பா 2 திரைபடம் பார்க்க வந்த போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் நான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன். அவர்கள் குடும்பத்தினரை நேரில் பார்க்க விரும்புகிறேன். என்ன செய்தாலும் அவர்களது இழப்பை ஈடு செய்ய இயலாது. இந்த நேரத்தில் உணர்வுப்பூர்வமாக ஆதரவாக இருக்கிறேன். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'கெத்து தினேஷ்' முதல் 'லக்கி பாஸ்கர்' ஆண்டனி வரை... 2024ஆம் ஆண்டின் சிறந்த கதாபாத்திரங்கள்!
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழு, மற்றும் தியேட்டர் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் 'புஷ்பா 2' படக்குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தெலுங்கானா அரசு திரைப்பட சிறப்புக் காட்சிகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.