சென்னை: குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட விமானி ஜி.ஆர்.கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் சூரரைப் போற்று.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின் திரை வாழ்கையில் இத்திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதனை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். கரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழலில் நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியானது. படம் வெளியாகும் முன்னரே, இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.
இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், மோகன்பாபு, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியில் இப்படத்தை இயக்கியுள்ளார், இயக்குநர் சுதா கொங்கரா. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். மேலும் ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டரடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில், கோமியோ ரோலில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ‘சர்ஃபிரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம், வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் சுதா கொங்கரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!