மதுரை: சுமன் குமார் எழுதி இயக்கி, கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், நடிகை கீர்த்தி சுரேஷை முதன்மை கதாப்பாத்திரமாக வைத்து, தமிழில் தயாரித்துள்ள முதல் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், மதுரையில் உள்ள கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "எனக்கு ரொம்ப பிடித்த ஊர் மதுரை. நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர். மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில் போன்றவை மதுரையில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும்.
பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம். மகிழ்ச்சியுடன் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக ரகு தாத்தா படம் இருக்கும். இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். 1970ஆம் காலகட்டத்தில் வாழ்ந்த பெண்களின் கதை தான் இப்படம். பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்படுகிறது. அது இன்றும் நடைபெற்று வருகிறது.
அது போன்ற விஷயங்கள் ஆங்காங்கே சிறு சிறு வசனங்களாகவும், காட்சிகளாகவும் படத்தில் இடம் பெற்றிருக்கும். ‘காலம் காலமாக வந்தால் அது கலாச்சாரம், திடீரென வந்தால் திணிப்பா’ என்ற டயலாக் இருக்கும். கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருப்போம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது. அதை நகைச்சுவையாக சொல்லியிருப்போம். இது முழுவதும் நகைச்சுவை படம் தான்" என்றார்.
பின்னர் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. நடிப்பு மட்டும் தான். வருங்காலத்தில் ஒருவேளை அரசியலுக்கு வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன். வருங்காலத்தில் அரசியல் ஆசை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த படத்தில் இந்தி திணிப்பை பேசுவதற்காக பெண்ணை முன்னிலையாக காட்டியுள்ளோம்.
பெண்களை பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது. இன்றுவரை இப்படி ஒரு படத்தை யாரும் எடுக்கவில்லை. வித்தியாசமான வகையில் இருக்கும். இந்திய திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள். இந்த படத்தில் இந்தியை திணிக்கக்கூடாது என்பதை தான் சொல்லி இருப்போம்.
கேஜிஎஃப், காந்தாரா திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதல் முதலில் படம் எடுக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை யோசித்து இருப்பார்கள். அப்படி தான் இந்தி திணிப்பை நகைச்சுவையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி பேச முடியும். நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள். அதனால் தான் ரகு தாத்தா என குறிப்பிட்டுள்ளோம்.
இயக்குநர் வித்தியாசமாக யோசித்து இப்படத்தை இயக்கியுள்ளார். பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இது இருக்கும். அட்லீ இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்கிறேன். ரகு தாத்தாவில் நடிக்கும்போதே அந்த இந்தி படத்தின் பேச்சு வந்தது. மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்றால் அது தப்பான விஷயம் தான். திரைப்படத்துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றார்.
இந்தி தெரியுமா? என்ற கேள்விக்கு, எனக்கு இந்தி நன்கு தெரியும் என்றார். ஆகஸ்ட் 15 அன்று நிறைய படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு, “ஆகஸ்ட் 15 அன்று நிறைய படங்கள் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பது என ஆசை. விக்ரம் நடித்துள்ள படம் வெளிவருகிறது. எல்லா படங்களும் வெவ்வேறு விதத்தில் நன்றாக இருக்கும். இதில் வேறுவிதமான, காமெடி படமாக ரகு தாத்தா இருக்கும்.
மற்ற படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் சுமன் பல்வேறு பெரிய திரைப்படங்களுக்கு எழுதி இயக்கி இருக்கிறார். அவர் முதன் முதலாக தமிழில் இந்த படத்தை எழுதி இயக்கி எடுத்திருக்கிறார். எனக்கு தியேட்டரில் சோலோவாக வெளியாக கூடிய முதல் படம் என்பதால், இது ஸ்பெஷலான படமாக இருக்கும். மேலும், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி என்ற பெண் பணியாற்றியுள்ளார்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்! - keethy suresh visit Madurai