திருச்சி: ஜி ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பீச் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் உள்ள ஒரு சில காட்சிகள் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எட்டு சண்டைக் காட்சிகள், 5 நிமிடத்திற்கு சிங்கிள் ஷாட் போன்ற காட்சிகளை இயக்குநர் ஹரி காட்சிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால், இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், "படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளேன். ஒரு ஸ்டூடியோ அறையில் அமர்ந்து படத்தை ப்ரோமோஷன் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.
ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்துத் தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு எவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது' என்றார்.
இதையும் படிங்க: பாங்காக் பயணியின் பையில் 10 அனகோண்டா - மிரண்டு போன சுங்கத் துறை! என்ன நடந்தது?