கேரளா: சினிமா உலகில் 40 ஆண்டுகளைக் கடந்து, தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், தற்போது கமிட்டாகியுள்ள படங்கள் தான் கடைசி திரைப்படம் என விஜய் தெரிவித்த நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்குப் பேரிடியாக இருந்தது.
-
Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!
— Vijay (@actorvijay) March 22, 2024
Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni 🤗 pic.twitter.com/axmw72aOls
தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில், கோட் (greatest of all time) என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அதற்காகக் கேரளா சென்ற விஜய்-க்கு ரசிகர்கள் ஆராவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள மற்ற நடிகர்களை விட விஜய்க்கு மலையாள ரசிகர்கள் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) படப் பிடிப்புக்கு மத்தியில், தன்னைக் காண ஆர்வத்துடன் அலைகடலெனக் குவிந்துள்ள ரசிகர்கள் முன் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய். அதனைத் தொடர்ந்து, தனது செல்போனில் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டார்.
அதில், "என்ட அனியன்மார், அனியத்திமார், சேட்டன்மார், சேச்சிமார், அம்மாமார்!... எல்லா மலையாளிமாருக்கும் என்டே ஹ்ருதயம் நிறஞ்ச நன்னி எனக் கூட்டத்தில் எடுத்த செல்ஃபி வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் 1.9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாஸ் காட்டி வருகிறது.
இதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோட் படப்பிடிப்பு தளத்தில் விஜயைக் காணக் கூடிய ரசிகர்களிடம், ஒரு வாகனத்தின் மீது ஏறி நின்று மலையாளத்தில் பேசிய அசத்தினார். அதாவது, "சேச்சி, சேட்டன்மார் உங்க எல்லாரையும் கண்டதில் சந்தோஷங்கள். கேரளாவில் மகாபலியைக் கொன்று ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் போது மக்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதேபோல், உங்கள் முகங்களைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் உள்ள எனது நண்பா, நண்பிகள் போல நீங்களும் வேற லெவல்" எனத் தெரிவித்தார். இந்த வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நடந்து வரும் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகவும், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதால் விரைவில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விரைவில் திரைக்கு வருவதாகவும், அதாவது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்து வரும் கோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.