சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூரி. பின்னர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விடுதலை இரண்டாம் பாகம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி, ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி ஆகியோர் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமம் ராகவம்'. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சமுத்திரக்கனி, இயக்குநர் பாலா, பாண்டியராஜன், சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்த பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த முறை வாக்களிப்பது விடுபட்டு போனது, அடுத்த முறை கண்டிப்பாக வாக்களிப்பேன். விடுதலை முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி அதிக காட்சிகளில் நடித்திருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்தது போல் வாத்தியாரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். அனைவருக்கும் விடுதலை இரண்டாம் பாகம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். கொட்டுக்காளி திரைப்படம் வெளிநாட்டவர்களால் மிக பயங்கரமாக கொண்டாடப்பட்டது” எனத் தெரிவித்தார்.