சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் தீபாவளி பள்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்.18) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் மேஜர் முகுந்த் குறித்து செய்தியில் மட்டும் தான் கேள்விபட்டுள்ளேன். ஆனால் ராஜ்குமார் பெரியசாமி அவரை பற்றி முழு கதையை சொன்ன போது என்னை முகவும் பாதித்தது. அவரது வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
அமரன் அனுபவம்: இந்த படத்தின் இடைவேளை காட்சியின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போது நடுங்கும் குளிர். காட்சியின் நடுவே நம்மை மீறி உடல் நடுங்கும். ராஜ்குமார் பெரியசாமி பிக்பாஸ் இயக்குநராக இருந்துள்ளார். என்னை காஷ்மீருக்கு 100 நாட்கள் பிக்பாஸ் போல அழைத்து சென்றார். முகுந்த் தமிழ் மீது அதிக பற்று கொண்டதால் அவரது வாழ்க்கை கதையில் தமிழ் ஹீரோ நடிக்க வேண்டும் என அவரது குடும்பத்தார் விரும்பினர்.
ராஜ்குமார் டிவியில் பணிபுரிந்த காலத்தை விட தற்போது மிகவும் ஸ்ட்ரிக்ட். நான் ஜிம்மில் மட்டும் பயிற்சி செய்யவில்லை. இந்த படத்திற்காக மும்பையில் ஆயுத பயிற்சியும் எடுத்தேன். எனக்கு ஜீவி பிரகாஷை பல வருடங்களாக தெரியும். கூடிய விரைவில் நானும் அவரும் ஒரு பெரிய படத்தில் இணையவுள்ளோம்.
சாய் பல்லவி குறித்து பேசிய எஸ்.கே: நான் சாய் பல்லவியை முதலில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது சந்தித்தேன். அதற்கு பிறகு பிரேமம் திரைப்படம் வெளியான போது நிவின் பாலிக்காக படம் பார்க்க சென்றேன். அப்போது சாய் பல்லவிக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. பிரேமம் படத்தில் சாய் பல்லவி நன்றாக நடித்திருந்தார். அவரை பாராட்டுவதற்காக கால் செய்த போது, “நன்றி அண்ணா” என்றார். தொடர்ந்து என்னை அண்ணா என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. தற்போது சாய் பல்லவி சினிமாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளார்.
ரஜினி, கமல் நட்பு: பல கிளாசிக் படங்களை தயாரித்துள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. நான் தொகுப்பாளராக ஒரு நிகழ்ச்சியில் கமல் சாரை ரஜினிகாந்த் குரலில் வரவேற்றேன். அப்போது தான் அவரை முதலில் சந்தித்தேன். கொட்டுக்காளி படத்தை பார்த்து விட்டு மூன்று பக்கம் விமர்சனம் எழுதி பாராட்டினார். நான் ரஜினிகாந்த் ரசிகன் என்றாலும் கமல்ஹாசன் என்னை பாராட்டியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படம் வெளியாவதால் ரஜினி சார் கண்டிப்பாக முதல் நாள் படம் பார்ப்பார். ரஜினி சார், கமல் சார் இடையே அப்படி ஒரு நட்பு. அதனாலேயே அவர்கள் 'அபூர்வ சகோதரர்கள்'.
அஜித் சொன்ன வார்த்தைகள்: தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதில் என்ன தவறு என யோசித்து பிறகு சரி செய்தேன். அதனால் எனது கரியர் ஓவர் என பல பேர் கூறினர். அந்த இரவு ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது, என்னை நடிகர் அஜித் வரவேற்றார். அப்போது என்னை, “வெல்கம் டூ பிக் லீக்” (Welcome to the big league) என்றார். பின்னர் அஜித், “உங்களது தோல்வியின் போது பலர் மகிழ்ச்சியடைந்தால், நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் என்று அர்த்தம், அதனால் Welcome to the big league” என்றார்.
இதையும் படிங்க: "நன்றி, தலைவா"... 'கோட்' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!
விஜய் கொடுத்த பரிசு: இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், "தளபதி உங்களுக்கு கொடுத்த துப்பாக்கி மற்றும் வாட்ச் பரிசு, இரண்டில் எது ஸ்பெஷல்?" என கேட்க, சிவகார்த்திகேயன், “தளபதி கொடுத்த அன்பு, ரொம்ப ஸ்பெஷல்” என்றார். நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்