ஐதராபாத்: நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியவர். ரஜினி, விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்கள் தான் மிகப் பெரிய அளவில் வியாபாரம் செய்யப்படுகின்றன. தற்போது இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது எனலாம். மாவீரன், அயலான் படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். மேலும் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்றது.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்ததிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது உடல் எடையை கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படம். இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு வீடியோ நாளை (பிப்.16) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி இயக்குநர்களின் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "வெற்றி துரைசாமியிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" - இயக்குநர் வெற்றி மாறன்..!