சென்னை: ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் விஜய் பாண்டி தயாரிப்பில் இயக்குநர் வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் சதீஷ், மது சூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சதீஷ், “நாய் சேகர் ரிலீஸ் நேரத்தில் வெற்றி கொடுத்ததற்கும், கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. விஜய் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் கையால்தான் இந்த படத்திற்கு செக் வாங்கினேன். அவர்தான் துவக்கி வைத்தார். அவருடைய கட்சி பெயர் அறிமுகம் செய்யும் முதல் நாள் அவரை பார்க்கும் போது, கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட் என்று சொன்னார்.
அதை அவர் சொல்லி கேட்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தை அவர் பார்த்திருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் பேச நினைத்து இருக்கிறார் என்பது, நான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன் என்றுதான் நினைக்கிறேன். அவர் ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பது குறித்து நிறைய முறை கூறியுள்ளேன்.
கத்தி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தபோது, இயக்குநர் வெங்கியை உங்கள் தீவிர ரசிகன் என்று விஜய் சாரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு பிறந்தநாள் என்றதும், வீடியோ மூலம் விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்தார். (நடிகர் சதீஷ் அந்த வீடியோவையும் நிகழ்ச்சி முடிந்த பிறகு மேடையில் போட்டுக் காட்டினார்) . நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் படத்தில் நிறைய வி இருக்கிறது. அஜித் சார் படங்களில்தான் நிறைய வி இருக்கும் எனவும், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, சதீஷை புகழ்ந்து பேசியதை சுட்டிக் காட்டிய சதீஷ், விஜய் சார் மாதிரி இல்ல, தலைவாசல் விஜய் மாதிரி ஆடினாலே பெரிய விஷயம்தான். கத்தி ஷூட்டில் இருக்கும போது, டான்ஸ் மாஸ்டர் ஆடியதை பார்த்தே ரிகர்சல் பண்ணாமல் படப்பிடிப்பில் சூப்பராக ஆடினார். அதைப் பார்த்து அசந்து விட்டேன்.
நல்ல முயற்சியாக, கோயம்புத்தூர் விமான நிலையத்தில்தான் இந்த படத்தை எடுத்தோம். பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அரசியலில் நம் எல்லோர் ஆதரவும் விஜய் சாருக்கு இருக்கும் என்றும் நம்புகிறேன். பின்னர், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய சதீஷ், ரொம்ப நாளாக உதயநிதி ஒரே போன் நம்பர்தான் வைத்திருக்கிறார்.
நடிகராக இருந்த போதிலிருந்து, எப்போது போன் பண்ணாலும் எடுத்து பேசுவார். இப்போது அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருக்கும் போதும் போன் பண்ணா, எடுத்து பேசி பிரச்சினையைத் தீர்க்கக் கூடியவர். நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த நபர் உதயநிதி ஸ்டாலின்தான் எனவும், அந்த தன்மை நிச்சயமாக அவரை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன்" என்று பேசினார்.
பின்னர் பேசிய இயக்குநர் சுப்பிரமணிய சிவா, "அனைவரும் நன்றி உணர்வோடு வருவது சந்தோஷமாக இருக்கிறது. திருடர்கள் கதை எப்போதும் சமூகத்துக்குத் தேவையான கதையாக இருக்கிறது. திருடர்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாததாகி விடுகிறது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் தீனா!