கோயம்புத்தூர்: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் நடிகரும், இயக்குநருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர்கள் ராம்நகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இது எதிர்பார்த்தது தான்: அப்போது பேசிய நடிகர் ரஞ்சித், "கவுண்டம்பாளையம் திரைப்படம் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு பிறகு வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆதரவு அளித்ததற்கு நன்றி. இந்த படத்திற்கு திரையரங்குகள் குறைவாக கிடைத்ததில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. இது எதிர்பார்த்தது தான். யாரையும் குறை கூற விரும்பவில்லை. இது போன்ற நேரங்களில் சிறகுகள் உடைக்கப்படுகிறது என்பதை உணர்கிறேன்.
ஆணவ கொலைக்கு எதிரானவன்: நான் பிறந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இந்த படத்திற்கு குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்திருப்பது வருத்தமளிக்கிறது. பெற்றோர்களுக்காகவும், குடும்பங்களுக்காகவும் தான் இந்த படத்தில் செய்தி சொல்ல வருகிறேன். என் மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் நான் கூறிய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டு மக்களிடம் போய் சேர்கிறது. நான் ஆணவ கொலைக்கு எதிரானவன்.
வீடு வீடாக கேசட் தருவோம்: என்னை பற்றி இனிமேலும் இப்படி கூறாதீர்கள். இப்படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலானவர்கள் கோவை மண்ணை சேர்ந்தவர்கள். சென்சார் போர்டு சர்டிபிகேட் இருந்தும் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் தோல்வி அடையவில்லை. இந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அதுவே எங்களின் வெற்றி. கூடிய விரைவில் இந்த படம் OTT-யில் வெளியாகும். அது கிடைக்கவில்லை என்றால் ஊர்களில் திரையைக் கட்டி ஒளிப்பரப்புவோம் அல்லது வீடு வீடாகச் சென்று கேசட் தருவோம்.
ரஞ்சித் 3.o: தான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல. தாய்மார்கள் அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டுவீர்கள். சினிமாவினால் தான் வன்முறைகள் அதிகமாகிறது என்ற கருத்தை நான் சொல்ல முடியாது. அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ரஞ்சித் 3.o என்ற புதிய உத்வேகத்துடன் தான் சர்ச்சையே வந்திருக்காது" என்று தெரிவித்தார்.
சர்ச்சையே வந்திருக்காது: இப்படம் குறித்து பேசிய நடிகை ஆல்ஃபியா கூறுகையில், "இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். படத்தை பார்க்காமலேயே சர்ச்சையை கிளப்பி விட்டார்கள். படத்தைப் பார்த்து இருந்தால் சர்ச்சையே வந்திருக்காது" என தெரிவித்தார்.
சாதி படம் கிடையாது: தொடர்ந்து பேசிய நடிகர் அனீஸ் கூறுகையில், "எங்கள் குடும்பம், நண்பர்கள் பார்ப்பதற்கு கூட திரையரங்குகள் இல்லை. அப்படி இருந்தும் ஓடக்கூடிய திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினரை பார்க்க வைத்த பொழுது, படத்தை பார்த்துவிட்டு அனைவரும் பாராட்டினர். இது சாதி படம் கிடையாது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்க வேண்டும் - யாரை சொல்கிறார் கூல் சுரேஷ்? - cool suresh about big boss show