சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படம் தங்கம் கடத்தல் குறித்த கதை என கூறப்படும் நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் ’தேவா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கூலி திரைப்படம் தனிக்கதை எனவும், இப்படம் தனது LCU யுனிவர்சில் இடம்பெறாது என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ஜெய்ப்பூரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் அவரது ரசிகர்கள் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறி சுவாமி விவேகானந்தர் புத்தகத்தை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: "அதீத மழை மட்டுமே வெள்ளத்துக்கும், பாதிப்புகளுக்கும் காரணம் அல்ல"-ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நீரியல் வல்லுநர் சொல்லும் காரணம்!
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்திடம், திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து கேட்டபோது, ரஜினிகாந்த் "எப்போ நடந்தது?" என அதிர்ச்சியாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கடந்த மழையில் இந்த சம்பவம் நடந்ததாக செய்தியாளர்கள் கூறியபோது, " 'ஓ மை காட்' என வருத்தத்துடன் கூறினார். மேலும் கூலி திரைப்பட படபிடிப்பில் பங்கேற்க ஜெய்ப்பூர் புறப்பட்டு செல்கிறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.