சென்னை: சிதம்பரம் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த படத்தில் சௌபின் ஷபிர், ஸ்ரீநாத் பாசி, காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலுக்கு நண்பர்கள் குழுவாக சுற்றுலா செல்கின்றனர்.
அங்கு, குணா குகையில் சிக்கிக் கொள்ளும் தனது நண்பரை எவ்வாறு மற்ற நண்பர்கள் காப்பாற்றுகின்றனர் என்பதே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதை. இத்திரைப்படம் குணா படத்தை தொடர்புபடுத்தி உருவானதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை எளிதில் கவரும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இதனால் தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு நிகராக பிரபலமடைந்து, திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆனது. உலகம் முழுவதும் மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து, தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், தனுஷ், சித்தார்த், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பலர் நேரில் அழைத்து படக்குழுவினரை வாழ்த்தினர். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். ரஜினிகாந்த் பாராட்டியது மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மறைந்த டேனியல் பாலாஜி உடலுக்கு ஆடுகளம் கிஷோர், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி! - Actor Daniel Balaji Death