சென்னை: நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களுடன் இணைந்து 'மாற்றம்' என்ற சேவை அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
மேலும், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து மாற்றம் அமைப்பில் விவசாயம், கல்வி, மருத்துவத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளனர். இதன் தொடக்க விழா இன்று (மே.1) சென்னையில் நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், அவரது அம்மா, எஸ்.ஜே.சூர்யா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
பின்னர், நடிகர் ராகவா லாரன்ஸ் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் உதவிபெற்று தற்போது உதவும் நிலையில் உள்ள குழந்தைகள் அனைவரும் இணைந்து உதவிகள் செய்ய நினைத்தனர். அதற்காக இந்த மாற்றம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். நான் ஏற்கனவே மருத்துவத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறேன். விவசாயம், கல்வி, மாற்றுத்திறனாளி, விளையாட்டு, மருத்துவம், ஆகியவற்றிற்கு நான் ஏற்கனவே உதவி செய்து வருகிறேன்.
மாற்றம் அறக்கட்டளையில் நிறைய பேர் இணைய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இப்போது தான் தொடங்கி உள்ளோம். இன்னும் நிறைய பேர் இணைவார்கள். யாரெல்லாம் இணைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ, என்னுடன் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, எல்லோரும் வரலாம், எல்லோரும் ஹீரோதான்.
இந்த ஒருவாரம் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்குச் செல்கிறோம். டிராக்டர் சரியான நபர்களுக்குச் சென்று சேர வேண்டும். நாமும் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறோம். அது சரியான விவசாயிகளுக்குச் சேர வேண்டும். அவர்களை தேடிச் சென்று பார்க்க உள்ளோம்” என்றார்.
மேலும், “இதில் இணைய வேண்டியது அவரவர் விருப்பம். அனைவரும் வருவார்கள். தெலுங்கு நடிகர்களிடம் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இதைப் பார்த்துவிட்டு அவர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ரஜினியின் 'கூலி' பட டீசருக்கு செக் வைத்த இளையராஜா.. நோட்டீஸ் அனுப்ப காரணம் என்ன? - RAJINIKANTH COOLIE TEASER ISSUE