சென்னை: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் அந்தகன். இப்படத்தில் கார்த்திக், ஊர்வசி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தை ரீ மேக் செய்து தமிழில் 'அந்தகன்' படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தகன் ஆந்தம் என்ற பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் தியாகராஜன்,"அந்தகன் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மிகுந்த போட்டிக்கு இடையில் வாங்கப்பட்டது. இப்படத்தை வாங்கிய பிறகு கரோனா வந்தது. தொடர்ந்து படத்தை பண்ண நினைத்து, அந்த டாக்டர் கதாபாத்திரத்துக்கு கே.எஸ்.ரவிக்குமாரை தவிர யாரும் தோன்றவில்லை.
நடிகை ப்ரியா ஆனந்த் அழகான பெண். சிம்ரனுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வனிதாவுக்கு தீனி போடும் கதாபாத்திரம். அவரும் நன்றாக நடித்துள்ளார்" என்று தியாகராஜன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிறைய விஷயங்களை வித்தியாசமாக செய்திருக்கிறோம். படத்தின் முடிவு debatable climax ஆக இருக்கும். இது பிரசாந்த்துக்கு 50வது படம் என்பதால் நிறைய ஸ்பெஷலான விஷயங்கள் பண்ணி இருக்கோம். ஒரிஜினல் ஹிந்தி படத்தில், ஊர்வசி கதாபாத்திரம் வேறு மாதிரி இருக்கும். ஆனால் அந்தகனில் நிறைய கிரியேட்டிவ் பண்ணிருக்கோம்" என்றும் தியாகராஜன் கூறினார்.
கார்த்திக் (நவசர நாயகன்), சமுத்திரக்கனி என மற்ற கதாபாத்திரங்கள் குறித்தும் அவர் பேசினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ஊர்வசி, "நன்றாக சாப்பிட்டு லேசாக தூங்கிட்டேன். தூங்குவதை விட உலகத்தில் வேறு என்ன வேண்டும்? பிறகு தான் தியாகராஜன் நிகழ்ச்சிக்கு வருவது குறித்து கேட்டபோது தான் நியாபகம் வந்தது. நான் 9வது படிக்கும்போதே சினிமாவுக்கு வந்துவிட்டேன்.'தமிழ்' என்ற படத்தில் நானும் பிரசாந்த்தும் ஒன்றாக நடித்தோம்" என்று பழைய நினைவுகளை ஊர்வசி ஜாலியாக பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “ஊர்வசி என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ராட்சசி என்று வைத்திருக்கலாம் என்று ஜாலியாக கூறியவர், இந்த படமும் எல்லோர் நினைவிலும் இருக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இதையும் படிங்க: யூடியூப்பில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த மக்காமிஷி பாடல்! - BROTHER FIRST SINGLE