சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் அழகி. இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பார்த்திபன், தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, “தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத் தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும் என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்கள் என்று, அதையே தான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர் தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். பொதுவாகவே விநியோகஸ்தர்களுக்கு என ஒரு எண்ணம் இருக்கும்.
ஆனால் அதை அழகி போன்ற படங்களின் மூலமாக உடைத்தது எல்லாம் ரசிகர்கள் தான். நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பெயர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ்.
காதலர்கள் தோற்றுப் போகலாம், ஆனால் காதல் தோற்றுப் போகாது, அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை. சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நொறுங்கி போயிருப்பார்.
பொதுவாக பெண்கள் குடும்பத்தை கவனித்து கொண்டு, கணவனை அனைத்து விதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும். இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும்.
காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன். (உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா தேவயானி ?) . தேவயானி கதாபாத்திரமும் அவர் அதில் நடித்த விதமும் சிறப்பாக இருந்தது.
அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து, அழகி இரண்டாம் பாகமாக இந்த படம் மாற வேண்டும் என்பது தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி இரண்டாம் பாகத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன், என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பார்த்திபன் தேவயானி பல சுவாரஸ்யமான பதில்களை அளித்தனர்.
“உங்களுக்கு நிஜத்தில் இதுபோன்று காதலிகள் இருந்திருக்கிறார்களா? அவர்களை மீண்டும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டதா? என்று பார்த்திபனிடம் கேட்டதற்கு, “நந்திதா தாஸை ரோட்டோரத்தில் பார்த்த போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதுபோல பலமுறை நிஜத்திலும் ஏற்பட்டுள்ளது, இன்னும் அது மாதிரி நிறைய முறை ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னுடைய அடுத்த புத்தகத்தின் பெயர் கூட ‘வழிநெடுக காதல் பூக்கும்’ என்பதுதான். காதல் என்பது ஒரு முறை மட்டும் வந்து போய்விடாது. அது வந்து கொண்டே இருக்கும் என்றார்.
ஒரு பக்கம் புதிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் இப்படி பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது, “எப்போதுமே நல்ல விஷயங்கள் பழையதாக இருந்தாலும் திரும்பத் திரும்ப அலைகள் போல மீண்டும் தேடி வரும். பொங்கல், தீபாவளி சமயத்தில் ஏன் பெரிய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்? அந்த சமயத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.
என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு ‘டார்க் வெப்’ என்று பெயர் வைத்துள்ளேன்.
என்னுடைய ‘டீன்ஸ்’ படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன். ஒரு நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதை விட்டுவிட்டு ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக சென்று தேவயானி வேலை பார்த்தாரே அவர் தான் ‘அழகி’. அழகி படத்தின் வெற்றிக்கு பிறகு நானும் நந்திதா தாஸும் அடிக்கடி பேசும் சமயத்தில், நான் ஒரு கதையை தயார் செய்தேன்.
ஆனால் அது அழகி 2 அல்ல. ஆனால் அதில் சண்முகம், தனலட்சுமி மட்டுமே இருப்பார்கள். அந்த கதையை கேட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் தற்போது தங்கர் பச்சான் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ‘அழகி 2’ என்கிற பெயரில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டார். ஆனால் இப்போதும் நந்திதா தாஸ் இந்த படத்தை எப்போது துவங்குகிறீர்கள் எனக் கேட்டு வருகிறார்.
தங்கர் பச்சன் சார் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நான் வாழ்த்தியதற்கு காரணமே, இந்த அழகி 2 படத்தை நான் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் ஒரு பயங்கர சுயநலவாதி, அழகியின் 51 சதவீதம் இளையராஜா சார் தான். நான் வெறும் 13 திறமையாளர்களை மட்டுமே நம்பி ‘டீன்ஸ்’ என்கிற ஒரு படத்தை எடுத்து வருகிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: சூர்யா 44 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! - Suriya 44