சென்னை: நடிகர் மற்றும் முன்னாள் எம்பியான நெப்போலியன், ஜெயசுதா தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நெப்போலியன், அங்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இதுகுறித்து வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப் போது பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நெப்போலியன் மகன் தனுஷிற்கும், நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமா என்கிற ரீதியில் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இன்று (நவ.07) ஜப்பானில் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணிக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, கலா மாஸ்டர் வசந்த பவன் ரவி, அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன், ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷுடன் நெப்போலியன் குடும்பத்தினர் கப்பலில் ஜப்பான் சென்று சேர்ந்தனர். இதுகுறித்த வீடியோக்களை நெப்போலியன் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனுஷின் திருமணம் குறித்து சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை நெப்போலியன் பகிர்ந்திருந்தார். அதில், "எங்கள் முத்த மகன் தனுஷின் 8 ஆண்டுக்கால கனவு! இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத காலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துகளாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
இதையும் படிங்க: 50 வயதில் பத்து வேடங்களில் அசால்டாக நடித்தார்... கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சூர்யா!
எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு! அளவில்லா மனநிறைவு எங்களுக்கு! சாதித்து விட்டான். இந்த தருணத்தில் ஒருசில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாகவும் வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். வாழ்ந்து பார்க்க வேண்டும், கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான்! வாழ்ந்து தான் பார்போமே" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்