சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். மேலும், தவெகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது தவெக கொடியை அறிமுகப்படுத்தினார். அதோடு சேர்த்து தவெக கட்சிக்கான பிரத்யேக பாடலையும் வெளியிட்டார். மேலும் கட்சி மாநாடு விரைவில் நடைபெறும் எனவும், அந்த மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தைக் கூறுவேன் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு செப்டம்பர் மாத இறுதியில் திருச்சியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜயின் அரசியல் பயணம் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கருணாஸ் தனது கருத்தை தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “அரசியலுக்கு சேவை மனப்பான்மையில் விஜய் வருகிறார் என்றால் ஆரோக்கியமான விஷயம் தான். இன்றைக்கு பெரிய ஹீரோவாக இருக்கும் போது அரசியலுக்கு வருகிறார். ஆனால், அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. விஜயை வேடிக்கை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அது ஓட்டாக மாற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல, வேறொரு சின்னத்திற்கு ஓட்டு போட்டு பழகியவர்களை திடீரென சின்னத்தை மாற்றி ஓட்டு போடச் செய்வது எளிதல்ல.
முதலில் விஜய் தனது கருத்தியலைக் கூற வேண்டும். நடிகராக வேண்டுமானால் விஜய் பெரிய இடத்தில் இருக்கலாம், ஆனால் அரசியலைப் பொறுத்தவரை உதயநிதி பெரிய இடத்தில் உள்ளார். விஜயிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்பதற்கு, கருணாஸ் திடீரென்று ஏன் அரசியல் ஆசை வந்தது? கடந்த 20 வருடத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் வந்தது, அதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் ஏன் இந்த திடீர் அரசியல் ஆசை? என கேள்வி எழுப்பினார். நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ’கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் பிரபல கன்னட நடிகர்... வெளியான மாஸ் அப்டேட்! - Coolie movie update