சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம், தாரிணி காளிங்கராயர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்தார்.
பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ’ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காளிதாஸ் ஜெயராம், தாரிணி இருவருக்கும் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் புதுமணத் தம்பதிகளுக்கு நிகிலா விமல், பூர்ணிமா இந்திரஜித், நைலா உஷா, அன்னா பென், மஞ்சிமா மோகன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்தனர்.
தனது மகன் திருமணம் குறித்து நடிகர் ஜெயராம், “நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம். 1992 செப்டம்பர் 7 அன்று குருவாயூரப்பன் கோயிலில் எனது மனைவி கழுத்தில் தாலி கட்டும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அதேபோல் எனது மகன் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: 25 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குநர் பாலாவிற்கு பிரமாண்ட பாராட்டு விழா!
அதேபோல் நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், “திருமணம் என்பது என்னுடைய ஒரு பெரிய கனவு, அது நினைவாகியுள்ளது. நான் குட்டி என்று அழைக்கும் தாரிணியை திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம், தாரிணி திருமண விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.