சென்னை: கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் பிளாக். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர் நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் சாம் சி எஸ், விவேக் பிரசன்னா, இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி, தொகுப்பாளர் பிலோமின் ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஜீவா கூறுகையில், நாங்கள் கைதட்டலுக்காக ஏங்கக்கூடிய சாதி, அதற்காக தான் இது மாதிரியான படங்களை தேர்வு செய்கின்றோம் என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லையே?
அவருக்கு தனிப்பட்ட வேலைகள் ஏதாவது இருந்திருக்கலாம்.. அதனால் கூட வராமல் இருந்திருக்கலாம்.. எனக்கும் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் என கூறினார்.
வேட்டையன் திரைப்படம் வெளியான அடுத்த நாளே இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான காரணம்?
எப்படி இருந்தாலும் அதிக திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் தான் வெளியாகியிருக்கும். அதேபோல் மற்ற திரைப்படங்களோடு வெளிவந்திருந்தாலும் குறைந்த அளவு திரையரங்குகள் தான் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும். இந்த திரைப்படம் 8 மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டியது. அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்பதால் தள்ளிப் போனது. இந்த முறையும் தள்ளி வைத்தால் தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகிறது. எனவே, இந்த படத்திற்கு இந்த டைம் சரியாக இருந்ததால் திரைப்படத்தை வெளியிட்டோம் என கூறினார்.
எஸ்எம்எஸ் போன்ற படங்களில் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக இருக்கும் அதற்கு இயக்குனர்கள் தான் கதைகளை எழுத வேண்டும். எஸ்எம் ஸ் போன்ற படங்களை பண்ண வேண்டும் என்றால் அதில் நிச்சயமாக சந்தானம் இருக்க வேண்டும் என்றார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸில் விஜய்யை வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்ததே?
அது தெரியவில்லை, ஆனால் நாங்களே வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. 69 க்கு பிறகு என்ன பண்ண போறாருன்னு தெரியவில்லை.. விஜய் தொடர்ந்து படம் பண்ணினால் அது நூறாவது படமாக அமைவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என கூறினார்.
விஜயின் தவெக மாநாட்டிற்கு போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..?
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன் என கூறினார்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், கதை கேட்கும் போது எனக்கு புரியவில்லை.. அதன் பிறகு இரண்டு, மூன்று தடவை இயக்குனரிடம் கேட்டு தான் தெரிந்து கொண்டேன். இதுபோன்ற படங்களை பண்ணுவதற்கு மிகவும் ஆசையாக இருக்கின்றது. இதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. என்னுடைய இசை பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்