சென்னை: தமிழ் திரைத்துறையில் பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. இப்படம் நேற்று (ஜூலை 26) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி, ராயன் படத்திற்கு ஓம் பிராகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராயன் திரைப்படம் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தற்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக ராயன் திரைப்படம் உள்ளதாகவும் பல விமர்சனங்கள் வருகிறது. அதாவது, நேற்று படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைக்கதை ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் படத்தை ஆராவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷின் நடிப்பு, ஏஆர் ரகுமான் பின்னணி இசை ஆகியவை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது எனலாம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ராயன் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் அநேக திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. வெற்றிமாறன் படம் போல தனுஷின் இயக்கம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஆனாலும், ஒரு தரப்பினர் மத்தியில் இப்படம் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் (Box Office) குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ராயன் திரைப்படம் முதல் நாள் மட்டும் ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் ரூ.11 கோடியும், தெலுங்கில் 1.5 கோடியும் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளதால் படத்தின் வசூல் இன்றும் கூடுதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்