சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாராடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வை ராஜா வை, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர், டேனியல் பாலாஜியின் கண்களை அவரது உறவினர்கள் தானம் செய்ய முன்வந்தனர். உடற்கூராய்வுக்கு பிறகு சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது தாயார் கண்ணீர் மல்க டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன், அமீர், வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் ஆகியோர் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர். அதேபோல, நடிகர் விஜய் சேதுபதி அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல, நடிகரும், உறவினருமான அதர்வா முரளி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
இன்று மாலை அவரது டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.
இதையும் படிங்க: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் - DANIEL BALAJI