சென்னை: பாபி சிம்ஹா, வேதிகா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ரஜாக்கார்'. இப்படம் உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நிஜாம் ஆட்சிக் காலத்தில் இருந்த ரஜாக்கார் என்ற ராணுவப் படையினரின் அத்துமீறல்களை மையக்கதையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சுதந்திரம் அடைந்த போது தனித்தனி மாகாணங்களாக இருந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால் சில பகுதிகள் இணைய மறுத்ததாகவும், அவைகளை ஒன்றிணைந்து தனி நாடாக மாற்றத் திட்டமிடப்பட்டதாகவும் அந்த உண்மை சம்பவங்கள் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 1ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பாபி சிம்ஹா, வேதிகா, படத்தின் இயக்குநர் யாடா சத்யநாராயணா, தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம் குறித்து பாபி சிம்ஹா கூறும்போது "இப்படம் இரண்டு வருடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. நடந்த வரலாற்றை மக்களுக்குச் சொல்லும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது நடந்த போராட்டத்தில் இப்பட இயக்குநர், தயாரிப்பாளரின் உறவினர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லவே இப்படத்தை எடுத்துள்ளோம்.
எஸ்ஜே சூர்யா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வரவில்லை. இப்போதுள்ள சூழலுக்கும் இப்படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது ஒரு உண்மை சம்பவம். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் தெரியப்படுத்தவில்லை. அதைப் பற்றி தான் இப்படம் பேசுகிறது. இப்படம் பிரதமர் மோடியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுமா என்ற கேள்விக்கு, எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.
இந்த கதையை கேட்கும் போது இது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று எடுக்கப்பட்டது. எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற ஆதங்கம் தான் என்றார். தற்போது தேர்தல் நேரத்தில் இப்படத்தை வெளியிட ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கா என்ற கேள்விக்கு, அப்படி அரசியல் பின்னணி எதுவும் இல்லை. இச்சமயத்தில் படப்பிடிப்பு முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து, சென்சார் பெற்று, தற்போது ரிலீஸ் செய்யவுள்ளோம். இதில் எந்தவித அரசியலும் கிடையாது படத்தை படமாக பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!