சென்னை: லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், "இதுவரை நான் பண்ணிய படங்களில் முதல் பட சக்ஸஸ் மீட் (Success Meet) இதுதான். போன வருடம் கண்ணகி படம் ரிலீஸ் ஆனது. இந்த வருடம் ப்ளூ ஸ்டார் ரிலீஸ் ஆனது பெருமையாக இருக்கிறது.
ஒரு மனிதனை ரசித்துப் பார்ப்பது இயக்குநர் பா.ரஞ்சித் தான். இந்த கதை, இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் முடிவு செய்தது தான். அதற்கான வெற்றிக்கு எங்கள் உழைப்பை 100 சதவீதம் கொடுத்திருக்கிறோம். நான் நம்பிய பெரிய விஷயம், 'வானத்திற்கு அடியில் எல்லோரும் சமம் தான்' என்பது. அதை மக்கள் கொண்டாடுவது பெரிய வெற்றி தான். படமாக மட்டுமல்லாமல் மனிதத்துடனும் இது வெற்றி தான்" எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சாந்தனு கூறுகையில், "நடுவில் எழுந்து போனதுக்கு மன்னிக்கவும். என் ஒவ்வொரு படத்துக்கும் சொல்லுவாங்க, வெற்றி விழாவில் நாம் சந்திப்போம் என்று. என்னால் நம்ப முடியவில்லை. நம் வாழ்வில் தான் நடக்கிறதா என்று. இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். 100 சதவீதம் ஆதரவு எல்லாரும் கொடுத்தீர்கள். இதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
15 வருடங்கள் கழித்து (சக்கரக்கட்டி) படத்தில் இருந்து தற்போது வரை என 5 ஆயிரத்து 600 நாட்கள் ஆனது. வாழ்க்கையில் இந்த படம் மூலம் வெற்றி கிடைத்தது. என்னுடைய அப்பா, அம்மா முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது. எழுத்தாளர் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை என் அப்பாவிடம் இருந்து தெரிந்து கொண்டேன். அந்த எழுத்து படத்துக்கு அவ்வளவு முக்கியம்" என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு, நடிகர் பாக்யராஜ் தனக்கு அனுப்பிய கடிதத்தை படித்துக் காட்டி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், "நானும் சாந்தனுவும் வேறு வேறு இல்லை. இந்த படத்தை இந்த அளவுக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஒரு படம் வெற்றிப் படமாக மட்டும் இல்லாமல், எல்லோருக்குமான படமாக இருக்கிறது. எல்லாரும் ஒன்னு தான் என்று கூறும் படமாகவும் உள்ளது. ரஞ்சித் அண்ணா புரட்சிக்கு ஒரு அடையாளமாக மாறிவிட்டார்.
அவருடைய படத்தில் இசை, நடிப்பு என அனைத்துமே நன்றாக இருக்கும். நிறைய படங்களில் எனக்கு வெற்றி, தோல்வி இருந்திருக்கிறது. ஆனால் இந்த படம் தான் எனக்கு திருப்தி கொடுத்திருக்கு. என்னுடைய ரியல் லைஃப் ஆனந்தி தான் கீர்த்தி. மற்றவர்களோடு கம்பேர் (Compare) பண்ணாத என்று கூறுவார். அதுமட்டுமின்றி இயக்குநர் பா.ரஞ்சித் இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர்" என்றார்.
அதைத் தொடர்ந்து, பாடகர் அறிவு பேசுகையில், "ரஞ்சித் - ராஜேஷ் இருவருக்கும் இருக்கக்கூடிய நட்பு தான் இந்த தேசத்தின் விடுதலை. அரக்கோணம் என்றால் ரவுடிகள் என்று கூறுவார்கள். என்னை பொறுத்தவரை நான் அங்கு தான் வளர்ந்தேன். இதுவரை அப்படிப்பட்ட மக்களை பார்க்கவில்லை. ரொம்ப அன்பானவர்கள் அரக்கோணம் மக்கள். இந்த ப்ளூ ஸ்டார் அரக்கோணம் இடத்துக்கு அடையாளமாக அமைந்துள்ளது. ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி சமத்துவத்தின் வெற்றி. அம்பேத்கரின் வெற்றி" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் தக் லைஃப் ஷூட்டிங் ஓவர்.. ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட நடிகர் கமல்ஹாசன்!