ஹைதராபாத்: நடிகர்கள் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான இப்படம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பபிதா போகட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுஹானி பட்னாகர் தனது 19 வயதில் உயிரிழந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சுஹானி கடந்த சில காலங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுஹானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கல் படத்தைத் தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சுஹானி வேறு படங்களில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு பாலிவுட் திரை பிரபலங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனமான அமீர்கான்புரோடக்ஸன்ஸ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சுஹானி மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதில், “சுஹானி மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். மகளைப் பிரிந்து வாடும் சுஹானியின் தாயார் பூஜா மற்றும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தனர்.
மேலும், திறமையான இளம் பெண், சிறந்த அணி வீரரான சுஹானி இல்லாமல் தங்கல் படம் முழுமை அடைந்திருக்காது. எங்கள் மனதில் என்றும் சுஹானி நட்சத்திரமாய் திகழ்வார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!