சென்னை: தமிழ் சினிமாவின் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. நேற்று மட்டும் சுமார் 8 படங்கள் வெளியான நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் பழைய படங்களே திரையிடப்பட்டு வருகின்றன. சமீப காலமாக திரையரங்குகள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளன.
வெளியாகும் எந்த படங்களுக்கும் பார்வையாளர்கள் வரவு என்பது குறைந்து தான் காணப்படுகிறது. காரணம் ரசிகர்களை ஈர்க்கும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாதது. சிறிய பட்ஜெட் படங்கள், ஹீரோ யார் என்றே தெரியாத திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் கூட்டம் இன்றி திரையரங்குகள் காத்து வாங்குகின்றன.
இந்த வாரம் தமிழில் மொத்தம் 8 படங்கள் வெளியாகி உள்ளன. நினைவெல்லாம் நீயடா, வித்தைக்காரன், பைரி, பர்த்மார்க், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த படங்கள் எல்லாம் ஆட்கள் வரவு இன்றி காத்து வாங்குகின்றன. இது ஒருபுறம் இருக்க ரீ ரிலீஸ் படங்களான வாலி, பில்லா, காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கல்லா கட்டுகின்றன.
இந்த படங்களை அனைத்துமே பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகிவிட்டது. இருப்பினும் தற்போது திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போடுகின்றன. இதனால் திரையரங்குகளில் வெளியாகும் புதிய சிறிய பட்ஜெட் படங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
காரணம் 2கே கிட்ஸ் எனப்படும் இன்றைய தலைமுறையினருக்கு இது போன்ற கிளாசிக் படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் நண்பர்கள் உடன் வந்து இந்த படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
இதனால் ரீ ரிலீஸ் படங்கள் அனைத்துமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் திரையரங்கு உரிமையாளர்களும் ரீ ரிலீஸ் படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக குறைந்த விலையில் டிக்கெட்களை விற்பனை செய்கின்றனர். புதுப் படங்கள் கொடுக்காத வசூலை இது போன்ற ரீ ரிலீஸ் படங்கள் தருவதால் அவர்களும் இதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். வரும் காலங்களில் திரையரங்குகளும் விரும்பிய படங்களை ஒளிபரப்பும் மீடியமாக மாறி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 33 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த நெல்லையப்பர் கோயில் வெள்ளித்தேர்.. நெல்லை மக்களைக் குளிர்வித்த அமைச்சரின் அறிவிப்பு!