சென்னை: 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக ’இறுதிச்சுற்று’ படத்திற்காக நடிகர் மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக ’36 வயதினிலே’ படத்திற்காக ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு கௌதம் கார்த்திக்கிற்கு ’வை ராஜா வை’ படத்திற்காக வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு ’இறுதிச்சுற்று’ படத்திற்காக ரித்திகா சிங்கிற்கு வழங்கப்படுகிறது.
சிறந்த நகைச்சுவை நடிகராக ’அஞ்சுக்கு ஒண்ணு’ படத்திற்காக சிங்கம் புலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த நகைச்சுவை நடிகையாக ’திருட்டுக் கல்யாணம்’ படத்திற்காக தேவதர்ஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வில்லன் நடிகராக ’தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்ற அரவிந்த் சாமியும், சிறந்த கதாசிரியராக ’தனி ஒருவன்’ படத்திற்காக மோகன் ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தம வில்லன், பாபநாசம் படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜிப்ரான் வென்றுள்ளார். அதேபோல் ’தனி ஒருவன்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ராம்ஜி வெள்றுள்ளார். தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மார்ச் 6ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: ராமாயண் படப்பிடிப்பு தொடக்கம்? ஷாக் அப்டேட் வெளியிட்ட படக்குழு! இவங்கெல்லாம் வேற படத்துல இருக்காங்களா?